ஸ்மார்த்தம் என்பது பழங்காலம் தொட்டே இருந்து வரும் இறைவழிதான் என்றாலும், ஆதி
சங்கரர் தான் சீர்தூக்கி ஒரு புதுமுகத்தைக் கொடுத்தார். தனித்தனியாய் அவரவர்க்கு
உகந்த இஷ்ட தேவதைகளை வணங்கிக் கொண்டு தனித்தனிப் பிரிவாய் கிடந்தவர்களை அழைத்து,
இதோ உங்களுக்கெல்லாம் பொதுவானதொரு ஷண்மதம் என அதற்கான முறைகளை சீர்படுத்தினார்.
இதன் படி சிவன், சக்தி, திருமால், கணேசர், சூரியன் மற்றும் முருகன்் என்ற
அறுவரையும் முழுமுதல் கடவுளாக வணங்கலாம். பொதுவாக இந்த முறையினை
பின்பற்றுவர்களுக்கு ஸ்மார்த்தர் என்று இந்நாளில் வழங்கப்படுவாதால், இந்த வழிமுறையை
‘ஸ்மார்த்தம்’ என்றே வழங்கலாம். இந்த வழியில்் எல்லா வழிகளையும் ஏற்றுக் கொள்ளும்,
இலகுவான வளைந்து கொடுக்கும் தன்மையை ஏற்படுகிறது. இன்று இந்து மதம் என்று
நாமெல்லாம் பொதுவாக சொல்லும் ஒரு பொது முகம் உருவாகுவதற்கு இந்த வழிதான் தான்
வித்து.
தத்துவப்படி ஸ்மார்த்தர்களுக்கு ஆதி சங்கரரின் அத்வைதம் தான் அடித்தளம். அதாவது
இறைவன் ஈஸ்வரனும், நம் ஜீவனும் உண்மையில் முழுதிலும் பிரம்மமே. மாயையினால்
சிக்குண்டதால், ஈஸ்வரன் வேறு ஜீவன் வேறு என்பதாகத் தெரிகிறது. உயர் ஞானம்
கிட்டுமாயின், இந்த வேறுபாடு தெளிந்திடும்.
முக்தி அடைவதற்கு ஒரே பாதை ஞான யோகம்தான் என்பது பெரும்பாலான ஸ்மார்த்தர்களின்
நம்பிக்கை. அறிவின் தேடலாலும், குண்டலினி அல்லாத யோக முறையினாலும். குருவின்
ஆசியுடன் தொடங்கப்படும் இந்த யோக நெறியில் த்யானிப்பவர், தன்னையே ப்ரம்மமாக
நினைவில் நிறுத்தி, மாயையின் தளையில் இருந்து விடுபட முயல்வார். இவர்களின்
தீர்கமான, முடிவான இலக்கானது, நானும் அந்த ப்ரம்மமாக இருக்கிறேன் என்று
உணர்வதுதான். இதற்கு செய்ய வேண்டியதெல்லாம் எதெல்லாம் அஞ்ஞானம் (அவித்யயை) என்பதை
உணர்ந்து தோற்ற மயக்கத்திலிருந்து விடுபட வேண்டும்.
முக்தி அடைதலுக்கு வெறும் மந்திரங்களை ஓதுவதாலாலோ, உயிர் பலி கொடுப்பதாலோ அல்லது
தன்னையே வருத்தி நூறு உபவாச நோன்புகள் இருப்பதாலோ அடைந்து விட முடியாது. மறைகளை
படித்து உணர்வதும், ப்ரம்மத்தின் பிம்பத்தினை தன்னுள் கண்டுணர்வதும்,
த்யானத்தினாலும் அஞ்ஞானம் அகன்றிட வழி வகுக்கும்.
ஞானம் அடைதலுக்கு ஞான யோகமே வழி என்றாலும் அந்த சித்தி கிட்டுவதற்கு மூன்று
முன்பாதைகளையும் சொல்கிறார்கள். அவையாவன: பக்தி யோகம், கர்ம யோகம் மற்றும் ராஜ
யோகம்.
ஸ்மார்த்தர்களின் அன்றாட செயல்பாடுகள்:
1. ஸ்நானம்
2. சந்தியாவந்தனம்
3. ஜபம்
4. பூஜை
5. உபாசனை
6. அக்னிஹோத்ரம் அல்லது அக்னிகிரையம்
இவை தவிர அமாவாசை தர்பணம் மற்றும் ஸ்ரார்தம் செய்வதும் இவர்கள்
வழக்கம்.
இவர்கள் வழி செல்லும் மறைகள்:
வேதங்கள், அவற்றின் உபநிஷதங்கள், ஸ்மிருதி, புராணங்கள் மற்றும்
இதிகாசங்கள்